ஆன்மிகம்
பாபநாசம் பாபவிநாசர் கோவிலில் கொடியேற்றத்துக்கு பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றம்

Published On 2021-04-06 03:41 GMT   |   Update On 2021-04-06 03:41 GMT
பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலில் சித்திரை விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் முதல் நாள் மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. 9-ம் நாளான வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் தேரோட்டம் நடைபெறும். 10-ம் நாளான 14-ந்தேதி (புதன்கிழமை) மதியம் தீர்த்தவாரி, இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

அம்பை காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, இந்து ஆலய பாதுகாப்பு குழு உறுப்பினர் சங்கரநாராயணன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பண்ணை கண்ணன், சமுதாய நிர்வாகிகள் குத்தாலிங்கம், கிருஷ்ணன், அனஞ்சி, ஆறுமுக நயினார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி, அம்பாள் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலாவும், 8-ம் திருநாளான 12-ந்தேதி அன்று அகஸ்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி கொடுக்கும் வைபவமும் நடக்கிறது. தொடர்ந்து 13-ந்தேதி தேரோட்டமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் அகஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சங்கு சபாபதி, சங்கரலிங்கசுவாமி அறங்காவலர் குழு தலைவர் முருக சுவாமிநாதன் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டியினர், அம்பை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் ஆவுடையப்பன் (தி.மு.க.), இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.), காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அகஸ்தியர் கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் 8-ம் திருநாள் அன்று விரதம் இருக்கும் பக்தர்கள், அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், சந்தனகுடம் மற்றும் புனிதநீர் எடுத்து வருதலும், அங்கப்பிரதட்சணம், கும்பிடு நமஸ்காரம் செய்யும் சிறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து மதியம் அன்னம் சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் அகஸ்தியர் மற்றும் உலோக முத்திரை வீதி உலா வந்து, பூக்கடை சந்திப்பில் சிவபெருமான் திருமண காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
Tags:    

Similar News