ஆன்மிகம்
மருதமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டபோது எடுத்தபடம்.

மருதமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

Published On 2020-11-30 07:04 GMT   |   Update On 2020-11-30 07:04 GMT
மருதமலை முருகன் கோவிலில் தீபத் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பிறகு கோ பூஜை நடந்தது.

தொடர்ந்து மூலவருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்தார்.

இதையடுத்து மாலை 6 மணிக்கு மூலஸ்தானம், இடும்பன் கோவில், பஞ்சமுக விநாயகர், பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, ராஜகோபுர நுழைவாயில், ராஜகோபுரம், வரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர், நவகிரகம், நாககன்னிமார் ஆகிய சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வந்தார்.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி மரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பிறகு கோவில் முன்புறம் சொக்கப்பனை கொளுத்தப் பட்டது. இதையடுத்து சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்க ரதத்தில் வலம் வந்தார். பிறக இரவு அர்த்த ஜாம பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக நேற்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. தீபத் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News