செய்திகள்

கூடங்குளத்தில் அணுக்கழிவை சேமிக்க கூடாது: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2019-06-22 02:58 GMT   |   Update On 2019-06-22 02:58 GMT
கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதை கண்டித்தும், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காத மாநில அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை :

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதை கண்டித்தும், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காத மாநில அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நடிகர் மன்சூர் அலிகான், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் வினோத், தமிழர் தேசிய விடுதலை கழகம் சார்பில் ஜோசப் கென்னடி, தமிழர் நல பேரியக்கம் சார்பில் இயக்குனர் மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் சார்பில் செ.முத்துப்பாண்டியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்களுக்கும், மண்ணிற்கும் பெரும் தீங்காக அமைந்திருக்கின்ற கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வீரியம் குறையாத கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தக் கூடிய அணுக்கழிவுகளை, கூடங்குளம் அணு உலை அருகிலேயே மண்ணில் புதைத்து வைத்து சேமிக்கும் திட்டம் என்பது மானுட சமூகத்துக்கு மட்டும் இல்லாது, மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பேரழிவை விளைவிக்கக் கூடியது. எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News