லைஃப்ஸ்டைல்
பெண்களின் திருமண வயதை அதிகரித்தால்...

பெண்களின் திருமண வயதை அதிகரித்தால்...

Published On 2020-08-26 04:47 GMT   |   Update On 2020-08-26 04:51 GMT
திருமண வயதை அதிகரிக்கும்போது பெண்கள் தங்கள் கல்வி தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தாய்மை அடையும்போது தாய்க்கும், சேய்க்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும் நிலை ஏற்படும்.
வளரிளம் பருவ பெண்களின் அனைத்து விதமான பிரச்சினைகளையும் ஆராய்வதற்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்த பட்சமாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதனை மறுபரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

18 வயதிற்குள்ளேயே பெண்களை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் நாட்டின் பல பகுதியில் இருக்கத்தான் செய்கிறது. “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 வயதுக்குட்பட்ட பெண்களில் 1.5 மில்லியன் பேருக்கு திருமணம் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன” என்று யுனிசெப் கூறுகிறது.

2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக் கெடுப்புப்படி 27 சதவீத சிறுமிகள் 18 வயதை நெருங்குவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். திருமணமான பெண்களில் 31 சதவீதம் பேர் 18 வயதிற்குள் குழந்தை பெற்றுவிடுகிறார்கள். இதுபோன்ற காரணங்களால் அந்த இளம் தாய்மார்களின் உடல் நலமும், மன நலமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அது ஆரோக்கியமற்ற இந்தியா உருவாகவும் காரணமாகி விடுகிறது.

18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டு தாய்மை அடைந்து விடும் பெண்கள் உடல் அளவில் மிகுந்த பலவீனமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். பெற்ற குழந்தையை பேணி வளர்க்கும் அளவுக்கு அவர்களது உடலில் ஆற்றல் இல்லாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதை தொடர்ந்து ரத்த சோகை போன்றவை உருவாகி அவர்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆட்பட்டு விடுகிறார்கள். பெரும்பாலும் அத்தகைய இளம் பெண்கள் கிராமங்களில் வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்களாக இருப்பதால், வேலைகளுக்கு செல்ல முடியாத அளவிற்கு ஆரோக்கிய சீர்கேடு அடைகிறார்கள். இந்த நிலையை மாற்றத்தான் பெண்களின் திருமண வயத்தை அதிகரிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசிக்க தொடங்கியுள்ளது.

“18 வயதை கடந்த பிறகு திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுடன் ஒப்பிடுகையில், அதற்கு முன்னதாகவே கர்ப்பிணி ஆகிறவர்கள் எடை குறைந்தவர்களாகவும், ரத்த சோகைக்கு ஆளாகக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கல்வி, வாழ்க்கைத்தரத்திலும் பின் தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள்” என்று பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

திருமண வயதை அதிகரிக்கும்போது பெண்கள் தங்கள் கல்வி தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தாய்மை அடையும்போது தாய்க்கும், சேய்க்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும் நிலை ஏற்படும். 
Tags:    

Similar News