செய்திகள்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

Published On 2020-09-27 14:23 GMT   |   Update On 2020-09-27 14:23 GMT
வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் மசோதாக்கள் சட்டமாகியுள்ளது.
புதுடெல்லி:

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், எதிர்க்கட்சிகளில் கடுமையான எதிர்ப்பையும் மீறி கடந்த 20 ஆம் தேதி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பக்கோரியும் எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டன. 

அப்போது மாநிலங்களவை சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, மழைக்கால கூட்டத்தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். இதற்கிடையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 3 வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத்தலைவரின் ஒப்புதலையடுத்து வேளாண் மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டது.

குடியரசுத்தலைவரின் இந்த ஒப்புதலையடுத்து வேளாண் மசோதாக்கள் சட்டமாக மாறியுள்ளது. 

இதற்கிடையில், தற்போது சட்டமாக மாறியுள்ள வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News