லைஃப்ஸ்டைல்
புகைப்பிடிக்கும் பெண்

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்

Published On 2020-08-20 08:09 GMT   |   Update On 2020-08-20 08:09 GMT
காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது.
பொதுவாகவே புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும், பெண்களுக்கு இப்பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது. புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆய்வினை மேற்கொண்டவர்கள் 40 முதல் 69 வயதுள்ள 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தினர். இதயம் மற்றும் ரத்த நாள நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததை தொடக்கத்தில் உறுதிப்படுத்திக் கொண்டனர். இவர்களை 7 வருடங்கள் வரை தொடர்ந்து கண்காணித்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு முதல் தடவை ஏற்பட்டது தெரிய வந்தது. அவர்களில், 29%-வினர் பெண்களாக இருந்தனர்.

புகைப்பழக்கம் இல்லாத ஆண்கள், அப்பழக்கம் உடைய ஆண்கள் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிகரெட் பழக்கம் உடைய ஆண்களுக்கு குறைந்தது 2 தடவையாது மாரடைப்பு வரும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதேவேளையில், பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புகைப்பழக்கம் அற்ற மகளிரைவிட, சிகரெட் பழக்கம் உள்ள பெண்களுக்கு இது 3 தடவையாக அதிகமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம், புகைப்பிடித்தல் காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு 83% உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதும், டைப்-1 நீரிழிவு நோயின் தாக்கம் ஆடவரைவிட பெண்களுக்கு 3 மடங்கு அதிகமாகவும், டைப்-2 நீரிழிவு பாதிப்பு, மகளிருக்கு ஆண்களைவிட 47%-ம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.

‘‘பெண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இதன்மூலம் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவ முடியும் என்பதையும் வலியுறுத்துவதாக இந்த ஆய்வு அமைந்தது’ என்கிறார்கள் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஆய்வுக்குழுவினர். புதுமையான இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் BMJ என்ற இதழில் வெளியாகின.
Tags:    

Similar News