செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் - அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2021-06-28 02:45 GMT   |   Update On 2021-06-28 02:45 GMT
அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதுடன் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் மனிதப் பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றி பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை என்றாலும், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பெற்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. இதனை உணர்ந்து, தற்போது தலைவிரித்து ஆடும் கொரோனா தொற்று நோயினை முற்றிலும் ஒழிக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், இதுவரை பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வைரஸ் தான் வேகமாக பரவும் சக்தி உடையதாகவும், இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் டெல்டா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், எனவே மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமல்லாமல், தற்போது டெல்டா பிளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சீபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இதுமிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும், மேற்காணும் 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக இன்று (நேற்று) பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது போன்ற கட்டுப்பாடுகள் தற்போது முழுமையாக பின்பற்றப்படுவதில்லை என்றும், டாஸ்மாக் கடைகளில் மது வகைகளை வாங்க வருவோரும், கடை ஊழியர்களும் முக கவசம் அணியாமல் இருப்பதாகவும், இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

இதைப் பார்க்கும்போது வருமானத்தில் அரசு குறியாக இருக்கின்றதோ என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது. வருமானத்திற்காக கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்படுவதை அரசு வேடிக்கைப்பார்த்தால், வருமானத்தைவிட பல மடங்கு செலவுகளை அரசு எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும்.



எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்துதல் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இது 3-வது அலையை முற்றிலும் தவிர்க்க உதவும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News