செய்திகள்
சித்தராமையா

ப.சிதம்பரத்துக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்- சித்தராமையா

Published On 2019-08-31 01:56 GMT   |   Update On 2019-08-31 01:56 GMT
அதிகாரத்தை யாரும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும், ப.சிதம்பரத்துக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
மைசூரு :

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவுக்கு வந்தார். அவர் மைசூரு டவுன் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் அரசியல் ரீதியான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவற்றை எதிர்த்து போராடக்கூடிய குணம் அவருக்கு உண்டு. அவரால் சட்டப் போராட்டமும் நடத்த முடியும். அவருடைய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டால், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம். அதற்கு வாய்ப்பு உள்ளது.

யாரும் தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அது தவறு. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கத்தக்கது. முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் சிக்கலில் சிக்கி தவிக்கிறார். அவரை கைது செய்யக்கூடிய அளவிற்கு அவர் மேல் வழக்குகள் கிடையாது. தற்போது உள்ள வழக்கும் அதேபோன்ற வழக்குதான். உண்மை வெளிவரும். ப.சிதம்பரத்துக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



முன்னதாக சித்தராமையாவின் வீட்டிற்கு மைசூரு மாநகராட்சியை சேர்ந்த ஒரு பெண் கவுன்சிலர் தனது மகளுடன் வந்தார். அவர் சித்தராமையாவை சந்தித்து தனது மகளுக்கு கிராம கணக்காளர் வேலை பெற்றுத்தருமாறு கோரி வேண்டுகோள் விடுத்தார். மேலும் மனுவும் கொடுத்தார். அந்த சந்தர்ப்பத்தில் சித்தராமையா அந்த பெண் கவுன்சிலரின் மகளைப் பார்த்து “உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?“ என்று மிகவும் சிரித்தபடி கேட்டார். அதற்கு அந்த பெண் விரைவில் எனக்கு திருமணம் நடக்கும், அதற்கு முன்பு எனக்கு கிராம கணக்காளர் வேலையை பெற்றுத் தாருங்கள் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த சித்தராமையா, “உங்களைப் போல் என்னிடம் பலர் மனு கொடுத்துள்ளனர். அதேபோல் வேலை இல்லாமல் ஏராளமான இளைஞர்கள் திண்டாடி வருகிறார்கள். அதனால் நீங்கள் கர்நாடக அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றிபெறுங்கள். அதுதான் உங்களுக்கும் பெருமை சேர்க்கும்“ என்று அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

இதையடுத்து சித்தராமையா மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா மற்றும் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதையடுத்து அவர், மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் விரைவில் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News