ஆன்மிகம்
ஆணவத்தை சிலுவையில் அறைவோம்

ஆணவத்தை சிலுவையில் அறைவோம்

Published On 2021-06-04 04:19 GMT   |   Update On 2021-06-04 04:19 GMT
சிலுவை என்றாலே சாட்டையடி, சுத்தில், ஆணி மற்றும் தொங்கவிடப்படுகின்ற மரம் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும். அதைதான் ஆண்டவர் தன்னுடைய சீடர்களுக்கு நிபந்தனையாய் வைக்கிறார்.
ஆண்டவர் ஏசு தன்னை பின்பற்ற விரும்புகிறவர்களுக்கு ஒரு நிபந்தனையை வைக்கிறார். சீடராய் வாழ விரும்புகிறவர் தன்னலம் துறக்க வேண்டும், சிலுவையை சுமக்க வேண்டும். அவர் அனைவரையும் நோக்கி, “ என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னை பின்பற்றட்டும்“ (லூக் 9:23) இன்று சிலுவை என்பது நமக்கு மீட்பின் சின்னம், வாழ்வின் பாதை, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவர் ஏசு கூறியபோது, அது அவமானத்தின் சின்னம். சிலுவை என்று அவர் கூறியவுடன் அவர்கள் எண்ணத்தில் மரண வலிகளுடன் கூடிய சாவு, பொது வெளியில் நிர்வாணமாக்கப்பட்டு நடத்தப்படுதல், மற்றும் அவமானங்களும் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும்.

யாரும் விரும்பக்கூடிய ஒரு அடையாளம் அல்ல. அவர்களால் நம்மைப்போல் ஒரு ஆன்மிக பார்வையில் சிலுவையை பார்த்திருக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சிலுவை ரோமானியர்கள் அடிமைப்படுத்திய நாட்டு மக்களை அடக்க பயன்படுத்திய ஒரு அடக்குமுறை கருவி. ஆதிக்க சமூகத்தின் ஆணவத்தை காட்டும் கருவி, ஒரு கொடூரனின் கையில் இருந்த கொடிய ஆயுதம்.

சிலுவை என்றாலே சாட்டையடி, சுத்தில், ஆணி மற்றும் தொங்கவிடப்படுகின்ற மரம் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும். அதைதான் ஆண்டவர் தன்னுடைய சீடர்களுக்கு நிபந்தனையாய் வைக்கிறார். அது ஒரு பயங்கரமான நிபந்தனை. ஆணவத்தை, கயமையை, அநியாயத்தை, சுயநலத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருந்த அந்த சிலுவையில் அவற்றை எல்லாம் அறைந்துவிட்டு தாழ்ச்சியுடன் என்னை பின்பற்றுங்கள் என்கிறார்.

இன்று நம்முடைய வாழ்க்கை நம்முடைய ஆணவம், நம்முடைய தேவைகள், நம்முடைய திட்டம் மற்றும் நம்முடைய விருப்பு வெறுப்புகளை சுற்றியே சுழன்று கொண்டுள்ளது. அவைகளை சிலுவையில் அறையவேண்டும். ஆண்டவர் ஏசுவின் வழியில் உலக மீட்புக்கான சிலுவையை சுமக்க வேண்டும். அங்கு பிறர் அன்பு, மன்னிப்பு, அமைதி மற்றும் தாழ்ச்சி நம்முடன் நடைபோட வேண்டும். அதுதான் ஏசுவின் சீடராய் இருப்பதன் பெருமை.
Tags:    

Similar News