செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

Published On 2020-09-16 02:16 GMT   |   Update On 2020-09-16 02:16 GMT
மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்திற்கு இடையே எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து பேசினார். அவர் பேசும்போது, “கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அது தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறுகின்றனர். தமிழக அரசு கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பது தெரியும் என்றும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன நிலை எடுக்கப்போகிறது?. எதிர்க்கட்சிகளுடன் கலந்துபேசி முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு குழு பிரதமரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தலாம். கர்நாடக அரசுடனும் பேசவேண்டும். எனவே தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. நமக்கு வழங்கப்படவேண்டிய நீர் முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, இந்த நீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்பது எதிர்க்கட்சி துணை தலைவருக்கு நன்றாக தெரியும். இதுகுறித்து 3, 4 முறை மேலாண்மை ஆணையத்திடம் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

நாம் கடுமையான ஆட்சேபணை செய்த நிலையில், அதில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. ஆகவே, அவர்கள் எந்த வகையிலும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கின்றேன். நம்முடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு முழுமையாக நமக்கு சாதகமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News