செய்திகள்
யமுனா விளையாட்டு வளாகம்

டெல்லியில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்

Published On 2021-04-18 08:19 GMT   |   Update On 2021-04-18 08:19 GMT
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100-க்கும் குறைவான ஐசியூ படுக்கைகள் மட்டுமே உள்ளன என முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கொரோனா நிலவரம் மற்றும் சிகிச்சை வசதிகள் தொடர்பாக அவர் கூறியதாவது:-

டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனை படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. 



10 ஆயிரம் மருத்துவமனை படுக்கைகளில் 1800 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, மருத்துவமனைகளில் குறைந்தது 7000 படுக்கைகளை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100-க்கும் குறைவான ஐசியூ படுக்கைகளே உள்ளன. 

அடுத்த மூன்று தினங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 6000 படுக்கைகள் தயார் செய்யப்பட உள்ளன. இந்த படுக்கைகள் யமுனா விளையாட்டு வளாகம், காமன்வெல்த் விளையாட்டு கிராமம் மற்றும் ராதா சோமி சத்சங்க அரங்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டு, நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 

மத்திய அரசு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லிக்கு கூடுதலாக மருத்துவமனை படுக்கைகள் தேவைப்படுகின்றன. ஆக்சிஜன் சப்ளையும் தடையின்றி வழங்கப்படவேண்டும். வார இறுதி ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஆதரவு அளித்துவருகின்றனர். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News