செய்திகள்
கோப்பு படம்.

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Published On 2020-11-19 06:55 GMT   |   Update On 2020-11-19 06:55 GMT
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வலைகளை அறுத்து எறிந்து மீனவர்களை விரட்டியடித்தனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் ஆயிரத்து 500 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் 50 பேர் 6 பெரிய ரோந்து படகுகளில் வந்தனர்.

அவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களிடம் இங்கு மீன் பிடிக்க கூடாது. இது எங்கள் எல்லைப்பகுதி. இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரித்தனர். தொடர்ந்து மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை எடுத்துக் கொண்டு புறப்பட தயாரானார்கள்.

அப்போது இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து எறிந்து மீனவர்களை விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.

தாக்குதல் குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளுக்கு தலா ரூ 20,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். தங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News