ஆன்மிகம்
கற்களை வீசி வழிபட்ட நாயனார்

கற்களை வீசி வழிபட்ட நாயனார்

Published On 2021-01-15 08:30 GMT   |   Update On 2021-01-15 08:30 GMT
காஞ்சிபுரம் அருகில் உள்ள திருச்சங்கமங்கை என்ற பகுதியில் வாழ்ந்தவர், சாக்கிய நாயனார். இவரது வாழ்வில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.
காஞ்சிபுரம் அருகில் உள்ள திருச்சங்கமங்கை என்ற பகுதியில் வாழ்ந்தவர், சாக்கிய நாயனார். இவர் பவுத்த மதத்தை தழுவியவர். அதனால்தான் பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் பெருமானால், ‘சாக்கிய நாயனார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். ‘பவுத்தம்’ என்பதற்கு ‘சாக்கியம்’ என்ற பொருள் உண்டு.

இளைஞராக இருந்த சாக்கிய நாயனாருக்கு, ஞானத் தேடல் அதிகரித்தது. அவர் இனி ஒரு பிறப்பு வேண்டாம் என்று கருதினார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தேடத் தொடங்கினார். இதற்காக பல சமய நூல்களையும் கற்கத் தொடங்கினார். அதன் ஒரு கட்டமாக சைவ சமய நூல்களையும் படித்தார். அதில் ஒரு தெளிவைக் கண்டார். பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவனே வழி என்று உணர்ந்தார்.

சாக்கிய கோலத்தில் இருந்ததாலும், அங்கு சாக்கியர்கள் அதிகமாக வசித்து வந்த காரணத்தாலும், ஈசனை வழிபாடு செய்வதை மறைமுகமாக, யாரும் அறியாத வகையில் செய்து வந்தார். தினமும் சிவலிங்க தரிசனம் செய்த பிறகுதான், உணவு உண்ண வேண்டும் என்ற உயர்ந்த பழக்கத்தை பின்பற்றினார்.

ஒரு நாள் பரந்த வெட்ட வெளியில் சாக்கிய நாயனார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில் வழிபாடு ஏதுமின்றி கிடந்த சிவலிங்க திருமேனி தென்பட்டது. பராமரிப்பின்றி காணப்பட்ட அந்த லிங்கத்தை நினைத்து சாக்கிய நாயனார் உள்ளம் நொறுங்கினார். பின்னர் அதை தூய நீரால் நீராட்டி, மலர்கள் சாத்தி பூஜிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த பரந்துவிரிந்த வெட்ட வெளியில் நீரும் இல்லை, மலர் கொண்ட மரங்களும் இல்லை.

இதையடுத்து ஈசன் மீது கொண்ட அன்பு மிகுதியால், கீழே கிடந்த கல்லை எடுத்து, ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, அதை சிவலிங்கத்தின் மீது வீசினார். தன்னை கடுமையாக வழிபட்டால் கூட அதை கனிவாக ஏற்றுக்கொள்பவர் சிவபெருமான். அதனால்தான், சாக்கிய நாயனார் எறிந்த கல், கயிலையில் வாழும் ஈசனின் பாதங்களில் பொன்மலராக தஞ்சம் அடைந்தது.

பொதுவெளியில் இறைவனை பூஜிப்பதற்காக இதைச் செய்தாலும், பிறர் பார்க்கும் போது கல்லால் எறிவது போலத்தான் தோன்றும். அதனால் நமக்கு பாதகம் இல்லை என்று கருதிய சாக்கிய நாயனார், இந்த வழிபாட்டையே தினமும் செய்ய முன்வந்தார். தினமும் அந்த சிவலிங்கம் இருக்கும் இடத்திற்கு வருவார். சிவனை வழிபட்டு ஐந்தெழுத்து மந்திரம் உச்சரித்தபடி, கற்களை சிவலிங்கம் மீது எறிந்துவிட்டு, பின்னர்தான் வீட்டிற்குச் சென்று உணவு உண்பார். பல நாட்கள் இப்படியே கடந்த நிலையில் ஒரு நாள், சிவபெருமானையே எப்போதும் சிந்தையில் நினைத்தபடி இருந்த சாக்கிய நாயனார், அந்த ஆனந்தத்தில் சிவ பூஜை செய்வதற்கு மறந்து போனார். அதற்கு முன்பாகவே உணவருந்த அமர்ந்து விட்டார். உணவை எடுத்து வாயில் வைக்கப்போன தருவாயில், ஈசனை வழிபடாதது அவர் நினைவுக்கு வந்தது.

உணவை அப்படியே வைத்து விட்டு, சிவலிங்கத்தை நோக்கி விரைந்தார். தான் வர தாமதமானதற்கு ஈசனிடம் மன்னிப்பு கேட்ட சாக்கிய நாயனார், கீழே கிடந்த சில கற்களை எடுத்து, அதை சிவலிங்கத்தின் மீது வீசி எறிந்தார். அப்போது அவரது பக்தியில் மகிழ்ந்து போன ஈசன், தன் மனைவி பார்வதியுடன் இடப வாகனத்தில் தோன்றி சாக்கிய நாயனாருக்கு அருள்காட்சி கொடுத்தார். மேலும் அவர் எதற்காக இந்த சிவ வழிபாட்டை இதுநாள் வரை மேற்கொண்டாரோ, அந்த முக்தியையும், சாக்கிய நாயனாருக்கு அருளினார்.

சாக்கிய நாயனார், கல் எறிந்து வழிபட்டதாக சொல்லப்படும் சிவபெருமான், காஞ்சிபுரம் அடுத்துள்ள கோனேரிக்குப்பம் என்ற ஊரில் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் அருளும் இறைவனின் திருநாமம், ‘வீரட்டானேஸ்வரர்’ என்பதாகும். சாக்கிய நாயனார் கல் எறிந்ததன் அடையாளமாக, இங்குள்ள லிங்கத்தின் மீது கல் பட்ட வடு புள்ளி புள்ளியாக காணப்படுகிறது. மேலும் இறைவனின் சன்னிதிக்கு எதிரில் கையில் கல்லுடன் சாக்கிய நாயனாரின் திருமேனியும் காணப்படுகிறது.
Tags:    

Similar News