செய்திகள்
டிகே சிவக்குமார்

டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்

Published On 2020-10-06 02:01 GMT   |   Update On 2020-10-06 02:01 GMT
டி.கே.சிவக்குமார் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீடு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள வீடு உள்பட 14 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில், மோடி, எடியூரப்பாவின் மிரட்டல், சூழ்ச்சியால் சி.பி.ஐ. ஒரு கைப்பாவை போல டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளது. எடியூரப்பா அரசு மீதான ஊழல்களை சி.பி.ஐ. கண்டுகொள்ள வேண்டும். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையின் மூலம் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட பார்க்கிறார்கள். மத்திய அரசின் மிரட்டல்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் என்பதை மோடி, எடியூரப்பா அறிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக போராடவும், பா.ஜனதாவின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்தவும் நாங்கள் முன்வந்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில், டி.கே.சிவக்குமார் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனை அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்டு உள்ளது. சிரா, ஆர்.ஆர்.நகர் தொகுதி இடைத்தேர்தலை மனதில் வைத்தே இந்த சோதனை நடந்து உள்ளது. இந்த சோதனை பா.ஜனதா தலைவர்களின் வெறுப்பு அரசியலை காட்டுகிறது.

எத்தகைய தாக்குதல்களாலும் காங்கிரஸ் தலைவர்களின் மனஉறுதியை முறியடிக்க முடியாது. எடியூரப்பா, அவரது மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஏன் சி.பி.ஐ.க்கு தெரியவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஏன் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டில் மட்டும் சோதனை நடந்து வருகிறது? என்று கூறியுள்ளார்.


கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது தனது டுவிட்டர் பதிவில், மோடி தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களின் குரல்களை ஒடுக்க முயற்சி செய்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடப்பது ஏன்?. டி.கே.சிவக்குமார் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது அரசியல் நோக்கம் உடையது.

சிரா, ஆர்.ஆர்.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் மத்திய, மாநில அரசுகள் இத்தகைய மோசமான சூழ்நிலையை உருவாக்கி, டி.கே.சிவக்குமாரை பயமுறுத்த பார்க்கின்றன. இதற்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். பிரதமர் மோடியிடம் தார்மீக உரிமை இருந்தால், எடியூரப்பா குடும்பத்தினர் மீதான ஊழல்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், சி.பி.ஐ. தற்போது மத்திய புலனாய்வு அமைப்பில் இருந்து பா.ஜனதா புலனாய்வு அமைப்பாக மாறியுள்ளது. இதுபோல அமலாக்கத்துறை பா.ஜனதாவின் தேர்தல் அணியாக மாறியுள்ளது. பல்வேறு போராட்டங்கள் மூலம் கட்டப்பட்ட இந்தியாவின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழிக்க பார்க்கிறது. டி.கே.சிவக்குமார் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், கர்நாடக பா.ஜனதாவினர் கலக்கத்தில் உள்ளனர். இதனால் தான் சோதனை என்ற பெயரில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். எடியூரப்பா, விஜயேந்திரா ஆகியோர் செய்த ஊழலுக்கு ஆதாரம் உள்ளபோதிலும் அதுபற்றி விசாரிக்காமல் சி.பி.ஐ. புறக்கணித்து வருகிறது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் செய்தது பற்றி சி.பி.ஐ. விசாரிக்கவில்லை. ஆனால் டி.கே.சிவக்குமாரை மட்டும் குறிவைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மந்திரிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News