செய்திகள்
நகை திருட்டு

பஸ்சில் பயணம் செய்த மூதாட்டியிடம் 23 பவுன் நகை அபேஸ்

Published On 2020-12-03 08:56 GMT   |   Update On 2020-12-03 08:56 GMT
விழுப்புரத்தில் பஸ்சில் பயணம் செய்த மூதாட்டியிடம் 23 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா கல்லந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி விஜயலட்சுமி (வயது 60). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றார். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்த விஜயலட்சுமி நேற்று காலை 7.30 மணிக்கு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரத்திற்கு அரசு பஸ்சில் புறப்பட்டார்.

அப்போது திருமண நிகழ்ச்சியின்போது தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, நெக்லஸ், வளையல், கம்மல் என 23 பவுன் நகைகளை கழற்றி நகை பெட்டியில் பாதுகாப்பாக வைத்து அந்த பெட்டியை ஒரு பையில் வைத்துக்கொண்டு பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பயணியர் நிழற்குடையில் நிறுத்தப்பட்டதும் பஸ்சில் இருந்து விஜயலட்சுமி இறங்குவதற்குள் அவர் அருகில் சென்னையில் இருந்து உடன் பயணம் செய்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், விஜயலட்சுமியின் நகை பையை நைசாக எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வேகமாக நடந்து சென்றார்.

இதை பார்த்ததும் விஜயலட்சுமி, அருகில் இருந்த சக பயணிகள் உதவியுடன் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து அவர் வைத்திருந்த பையை வாங்கினர். அப்போது தனது பையை எடுப்பதற்கு பதிலாக கவனிக்காமல் எடுத்து வந்து விட்டதாக அந்த பெண், விஜயலட்சுமியிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதை நம்பிய விஜயலட்சுமி, அதே இடத்தில், தனது பையை திறந்து நகை இருக்கிறதா? என்று சரிபார்க்காமல் பை கிடைத்து விட்ட சந்தோஷத்தில் அவர் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பஸ்சில் சொந்த ஊரான கல்லந்தலுக்கு புறப்பட்டார்.

பின்னர் ஊருக்கு வந்து இறங்கியதும் விஜயலட்சுமி தன்னுடைய பையை திறந்து பார்த்தபோது அதிலிருந்த நகை பெட்டி காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பெட்டியோடு 23 பவுன் நகையையும், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வைத்து அந்த பெண் நைசாக அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. பறிபோன நகையின் மதிப்பு ரூ.8 லட்சமாகும்.

இதுகுறித்து விஜயலட்சுமி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு நகையை அபேஸ் செய்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News