செய்திகள்
கோப்புபடம்.

சாப்பிடும் பொருட்களில் அதிக அளவு செரிமானமாகி உடலில் சேர்வது முட்டை மட்டுமே - கால்நடை பல்கலைக்கழக தலைவர் பேச்சு

Published On 2021-10-10 08:12 GMT   |   Update On 2021-10-10 08:12 GMT
முட்டையில், கார்போஹைட்ரேட் தவிர மற்ற அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன.
திருப்பூர்:

திருப்பூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில்  கே.எஸ்.சி., பள்ளி மாணவர்களுக்கான, முட்டை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை வகித்தார். 

கால்நடை பல்கலைக்கழக தலைவர் முனைவர் மதிவாணன் பங்கேற்று, உலக முட்டை தினம் குறித்து பேசியதாவது:-

முட்டையில், கார்போஹைட்ரேட் தவிர மற்ற அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன. முட்டையில் 6 கிராம் அளவுக்கு புரதசத்தும், 5 கிராம் அளவுக்கு கொழுப்பு சத்தும் உள்ளன. சாதாரணமாக மனிதர்களின் எடைக்கு ஏற்ப அதே அளவுக்கு புரதசத்து சேர்க்க வேண்டும்.

சாப்பிடும் பொருட்களிலேயேஅதிக அளவு செரிமானமாகி உடலில் சேர்வது முட்டை மட்டுமே. 100 கிராம் முட்டையை சாப்பிட்டால் 85 கிராம் அளவுக்கு உடலில் சேர்கிறது. மற்ற பொருட்களில் இவ்வாறு கிடைக்காது.உடல் வளர்ச்சிக்கு தேவையான ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் முட்டையில் நிரம்பி இருக்கின்றன.

கல்லீரலை பாதுகாக்கும், ‘கோழின்’ சத்தும் உள்ளது. சிறுவர் முதல், முதியவர்கள் வரை, அனைவரும், தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். முட்டை சாப்பிட்டால், கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும் என்பது தவறான கருத்து. 

முட்டையில் உள்ள நல்ல கொழுப்பும், வைட்டமின் -டி’ சத்தும், உடலுக்கு கெடுதல் செய்யாது. நன்மையை செய்யும். இளைஞர்கள், பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News