செய்திகள்
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

Published On 2020-10-15 10:29 GMT   |   Update On 2020-10-15 10:29 GMT
‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்களும், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் தேர்வெழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு மனநல ஆலோசனை மையம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் கூறியதாவது:-

போட்டித்தேர்வு என்பது அனைவரும் வெற்றி பெறக்கூடியது அல்ல. அதற்கான மதிப்பெண்களை நிர்ணயித்து குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுப்பது தான். அதனால் தேர்வில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். மாணவர்கள் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடையலாம். தோல்வி அடைந்தால் துவண்டு விடக்கூடாது. மருத்துவம் மட்டும் படிப்பல்ல, அதற்கு மாற்றாக வேறெதும் உயர்கல்வியை தேர்ந்தெடுக்கலாம். வாய்ப்புகள் நிறைய உள்ளது. மேலும் பல்வேறு போட்டித்தேர்வுகள் உள்ளது.

பெற்றோரும் தங்களது விருப்பத்தை மாணவர்கள் மீது அதிகம் சுமத்தகூடாது. குடும்பத்தில் அனைவரும் கலந்து ஆலோசித்து மாணவர்களுக்கு எந்த துறை பிடிக்கிறது, எதில் ஆர்வம், ஈடுபாடு உள்ளதை என்பதை கேட்டறிய வேண்டும். அதற்கேற்ப வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஒரு முறை தோற்றால் தோல்வி அடைந்து மனக்கவலை அடைய கூடாது. அடுத்த முறை வெற்றிக்கான வழியை தேட வேண்டும். பெற்றோர், மாணவர்களுக்கு ஆறுதல் அளித்து உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை 94860 67686 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஏற்கனவே நீட் தேர்வு எழுத செல்வதற்கு முன்பும், தேர்வு எழுதிய பின்பும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News