ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

Published On 2020-08-24 08:51 GMT   |   Update On 2020-08-24 08:51 GMT
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோவிலுக்கு வெளியே நின்றபடியே சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது தனி சிறப்பாகும். இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்று நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. ஆவணி மாத ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் அம்மனுக்கு மலர் அலங்காரம், மருக்கொழுந்து, தாழம்பூ, ரத்னஅங்கி ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மட்டுமின்றி பிற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்திற்குள் வருமானம் வரக்கூடிய கோவில்களை தவிர பிற கோவில்களை திறக்க தமிழகஅரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலை நோக்கி படையெடுத்தனர். முழு ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனங்கள், கார்கள், சரக்கு வேன்களில் பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தனர்.

கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாததால் கோவிலுக்கு வெளியே நின்றபடியே சாமி தரிசனம் செய்தனர். மேலும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி கோவிலின் நுழைவு பகுதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். தாங்கள் கொண்டு வந்த தேங்காய்களை உடைத்து நெய்தீபம் முன்பு வைத்து சூடம் ஏற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த மாவு, கூழ் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.

முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய போலீசார் அனுமதி அளித்தனர். அவர்கள் பக்தர்களிடம் எந்தவித கெடுபிடியும் செய்யவில்லை. வரிசையாக சென்று தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள், வேப்பிலை ஆகியவற்றை கோவில் நுழைவுவாயில் முன்பு இருந்த இரும்பு கம்பியின் மீது தொங்கவிட்டனர்.
Tags:    

Similar News