வழிபாடு
சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் வாகன பவனியுடன் ஊர்வலமாக சென்றவர்களை படத்தில் காணலாம்.

நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம்

Published On 2022-03-05 03:18 GMT   |   Update On 2022-03-05 03:18 GMT
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம் நடந்தது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அய்யா வைகுண்டசாமியின் 190-வது அவதாரதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அய்யா வழி பக்தர்களின் பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. இதற்காக திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட அவதார தினபேரணி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைந்தது.

தொடர்ந்து நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் அய்யா வழி பக்தர்களின் சமய மாநாடு நடந்தது. இதில் அய்யா வழி பிரமுகர்கள் பங்கேற்று பேசினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலத்தை அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவன தலைவர் பால ஜனாதிபதி தொடங்கி வைத்தார். வக்கீல் ஜனா.யுகேந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள். அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக் கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக் குடம் சுமந்து சென்றனர்.

ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். பக்தர்களுக்கு பானகரம், மோர் போன்ற நீராகாரங்களும், அன்ன தர்மங்களும் வழங்கப்பட்டன. ஊர்வலமானது சுசீந்திரம், ஈத்தங்காடு, வடக்குத் தாமரைகுளம் வழியாக மதியம் 12 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியை சென்றடைந்தது.
Tags:    

Similar News