ஆன்மிகம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

திருவண்ணாமலையில் மகாதீப தரிசனம் இன்றுடன் நிறைவு

Published On 2020-12-09 09:05 GMT   |   Update On 2020-12-09 09:05 GMT
திருவண்ணாமலை தீபத் திருவிழா முடிந்த போதிலும் கடந்த 10 நாட்களாக தீப மலை உச்சியில் மகாதீபம் தொடர்ந்து காட்சி தருகிறது. இன்று இரவுடன் மகா தீபம் காட்சி நிறைவு பெறுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் .

இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 29-ந் தேதி தீப மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருவதால் கார்த்திகை தீபத்தன்று வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர தடைவிதிக்கப்பட்டது. சிறப்பு பஸ்களும் இயக்கப்படவில்லை.

மேலும் அன்று கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தீபத் திருவிழா முடிந்த போதிலும் கடந்த 10 நாட்களாக தீப மலை உச்சியில் மகாதீபம் தொடர்ந்து காட்சி தருகிறது. இன்று இரவுடன் மகா தீபம் காட்சி நிறைவு பெறுகிறது.

இதுபற்றி அறிந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கடந்த சில நாட்களாக வருகை தந்து மகா தீபத்தை தரிசித்துச் செல்கின்றனர்.

இதனால் கடந்த 10 நாட்களாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளியூர் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. நேற்றும் ஏராளமான பக்தர்கள் மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

11-வது நாளான இன்று இரவுடன் மகாதீபம் தரிசனம் நிறைவடைகிறது.

நாளை வியாழக்கிழமை காலை மலையில் இருந்து மகா தீப கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
Tags:    

Similar News