செய்திகள்
கோப்புபடம்

அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்வு-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-07-19 10:09 GMT   |   Update On 2021-07-19 10:09 GMT
30 ஆயிரம் மக்கள் தொகை மற்றும் ரூ.3 கோடி ஆண்டு வருமானம் உள்ள பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த முடியும்.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள் உள்ளன. அரசின் புள்ளிவிவரப்படி அவிநாசியில் 30 ஆயிரம் பேர், திருமுருகன்பூண்டியில் 34 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. ஆண்டு வருமானம் ரூ.3 முதல் ரூ.3.50 கோடியாக உள்ளது.

பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ள ஆன்மிக நகரமான அவிநாசியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பனியன் சார்ந்த தொழில்கள், விசைத்தறி, என்ஜினீயரிங், அரிசி ஆலை, ஸ்பின்னிங் மில் என பல தொழில்களும் பிரதானமாக உள்ளன. திருமுருகன்பூண்டியில் சிற்பம், பனியன் தொழில் அதிகளவில் உள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த இரு பேரூராட்சிகளும் திருப்பூர் நகரையட்டி இருப்பதால் கடந்த 15 ஆண்டுகளில் 2 பேரூராட்சிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து விட்டன. ஆனால் அதற்கேற்றவாறு சாலை வசதி, குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

மக்கள் தொகை மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்த கருத்துரு ஏற்கனவே அரசின் பரிந்துரையில் உள்ளது. கடந்த, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி 30 ஆயிரம் மக்கள் தொகை மற்றும் ரூ.3 கோடி ஆண்டு வருமானம் உள்ள பேரூராட்சிகளை  நகராட்சியாக தரம் உயர்த்த முடியும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:

இரு பேரூராட்சிகளையும், நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து கருத்துரு அரசின் பரிந்துரையில் உள்ளதே தவிர நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றனர்.
Tags:    

Similar News