ஆன்மிகம்
நாகராஜா கோவில்

நாகராஜா கோவிலில் தை திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-01-19 09:19 GMT   |   Update On 2021-01-19 09:19 GMT
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில். இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மக்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். அந்த நாட்களில் ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வார்கள்.

இந்த கோவிலில் தைத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு வருகிற 20-ந்தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

அதன்படி 20-ந்தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. முன்னதாக தந்திரி பூஜையை நீலகண்டன் நாராயணன் பட்டத்ரி நடத்துகிறார். அதைத்தொடர்ந்து கொடியேற்றப்படுகிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி, 6.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், 8.30 மணிக்கு சாமி பு‌‌ஷ்பக விமானத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

21-ந்தேதி காலை 7 மணிக்கு சாமி புஷ்பக விமானத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், மாலை 5.30 மணிக்கு சமய சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து வரும் விழா நாட்களில் சாமி வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, அபிஷேகம், இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, பஜனை, பட்டிமன்றம் மற்றும் பரதநாட்டியம் போன்றவை நடைபெறும்.

28-ந் தேதியன்று காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நடைபெறுகிறது.

29-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இன்னிசை கச்சேரி, இரவு 8.15 மணிக்கு பக்தி மெல்லிசை, 9.30 மணிக்கு சாமி கோவிலில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News