லைஃப்ஸ்டைல்
தாலசீமியா நோய் ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள்

தாலசீமியா நோய் ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள்

Published On 2020-08-23 04:30 GMT   |   Update On 2020-08-19 08:45 GMT
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. முகத்தில் எலும்பு வளர்ச்சி குறைபாடு, அதீத சோர்வு, உடல் வளர்ச்சியின்மை, மூச்சு விடுவதில் சிரமம், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் தென்படும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. ரத்தத்தின் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்னும் புரதம்தான் உடலின் பல பகுதிகளுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் முக்கியமான வேலையை செய்கிறது. அதன்மூலம்தான் நமக்கு சக்தி கிடைக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் அளவு குறையும்போது, அது ரத்த சோகையை ஏற்படுத்தும். உடல் பலவீனம் அடையும். தாலசீமியா நோய் 2 வகைகளில் மனித உடலை தாக்குகிறது. ஹீமோகுளோபின் 2 வகையான புரதத்தை கொண்டுள்ளது. அவை, ஆல்பாகுளோபின், பீட்டா குளோபின். குறைபாடு உள்ள மரபணுவின் காரணமாக ஆல்பா குளோபின் புரதம் முழுமையாக இல்லாவிட்டாலோ அல்லது மாறுபட்டு இருந்தாலோ, அது ஆல்பா தாலசீமியா. மரபணு குறைபாட்டால், பீட்டா குளோபின் புரதம் இல்லாத நிலை அல்லது மாறுபட்ட நிலை காணப்பட்டால், அது பீட்டா தாலசீமியா.

தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், சீனா, ஆப்பிரிக்க கண்டத்தில் சில பகுதிகளில் வாழும் மக்களிடம் ஆல்பா தாலசீமியா நோயின் பாதிப்புகள் அதிகம் காணப்படுகிறது. பீட்டா தாலசீமியா நோய் மத்திய தரைக்கடல் நாடுகளில் அதிகம் பேரை பாதித்திருக்கிறது. சீனர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்க, அமெரிக்கர்களை குறைந்த அளவில் தாக்கியிருக்கிறது. ஒவ்வொரு தாலசீமியா வகையும் தாலசீமியா மேஜர், மைனர் எனும் இரு பிரிவுகளை கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை ஆகிய இருவரிடமும் குறைபாடுள்ள மரபணு காணப்பட்டால், அந்த குழந்தைக்கு தாலசீமியா மேஜர் என்று அர்த்தம். குறைபாடுள்ள மரபணு தாய் அல்லது தந்தை யாராவது ஒருவரிடம் இருந்து குழந்தைக்கு சென்றிருந்தால், அந்த குழந்தைக்கு தாலசீமியா மைனர் என்று அர்த்தம். சில நேரம் பெற்றோரிடமும் இத்தகைய குறைபாடுள்ள மரபணு இல்லாமல், குழந்தைக்கு வரும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆல்பா தாலசீமியா மேஜர், பிறக்கும் குழந்தைகளையும், பிரசவமடையாத குழந்தைகளையும் பெரும்பாலும் தாக்குகிறது.

மேலும் முகத்தில் எலும்பு வளர்ச்சி குறைபாடு, அதீத சோர்வு, உடல் வளர்ச்சியின்மை, மூச்சு விடுவதில் சிரமம், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் தென்படும். தாலசீமியா மைனர் வகை நோயாளிகளுக்கு சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். வேறு அறிகுறிகள் தென்படாது. ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். நுண்ணோக்கி வழியாக சிவப்பணுக்களை ஆராய்ந்து சிவப்பணுவின் வடிவம், தன்மை மாறியிருக்கிறதா என்பதை கண்டறிவார்கள். ஹீமோகுளோபின் எலக்ட்ரோபோரசிஸ் பரிசோதனையின் மூலம் மரபணுவின் வடிவம் மாறியுள்ளதா என்று கண்டறியப்படும். மியூடேஷனல்அனாலசிஸ் மூலம் ஆல்பா தாலசீமியா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் தாலசீமியா நோயாளிகளுக்கு ரத்த மாற்று சிகிச்சையை தொடர வேண்டும். அதீதமான இரும்புச்சத்து உடலில் தங்காமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். தற்போது இதற்கு மாத்திரைகள் கிடைக்கின்றன. தாலசீமியா மைனர் உள்ள ஆண், பெண்ணுக்கு தாலசீமியா மேஜர் பாதிப்புள்ள குழந்தை பிறப்பதற்கு 25 சதவீத வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். உங்களின் ரத்தச் சம்பந்தங்களுக்கு இந்த நோயின் தாக்குதல் இருந்தால் நீங்களும் தாலசீமியா பரிசோதனையை செய்துகொள்ள வேண்டியது அவசியம், என்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள்.
Tags:    

Similar News