செய்திகள்
மழை வெள்ளம் வடியாததால் மக்கள் மீன்பாடி வண்டியை பயன்படுத்தி வெளியே செல்வதை காணலாம்

கனமழை பெய்து 2 நாட்களுக்கு பிறகும் சென்னையில் வடிய மறுக்கும் மழை நீர்

Published On 2020-11-28 02:57 GMT   |   Update On 2020-11-28 02:57 GMT
கனமழை பெய்து 2 நாட்களுக்கு பிறகும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிய மறுக்கிறது.
சென்னை:

வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக, கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சென்னையில் விட்டு, விட்டு தொடர் மழை பெய்து வந்தது. இதனால், சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்றது.

கனமழை பெய்து 2 நாட்களுக்கு பிறகும் சென்னையின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. சென்னை கொளத்தூர் பகுதிகளில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. கொளத்தூரில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து தேங்கி நிற்கிறது.

இந்த மழை நீர் வெளியேற வழியின்றியும், சாலையில் சுமார் இடுப்பு அளவுக்கும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். கடைகளுக்கு பொருட் கள் வாங்க முடியாமல் கூட மக்கள் அவதிப்படுகின்றனர்.

மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால், பெரும்பாலானோர் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்ட னர். நேற்று முதல் மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ள நிலையில், மழைநீர் லேசாக வடிய ஆரம்பித்துள்ளது. இதை பயன்படுத்தி அந்த பகுதியில் உள்ள மக்கள் சிறிய மோட்டார் பம்பை வைத்து தங்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றியதை பார்க்க முடிந்தது.

இதே போன்று கொளத்தூர் தில்லை நகர், செல்வி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. கொரட்டூர் ஏரிக்கு செல்ல வேண்டிய மழைநீர் இந்த பகுதிகளில் தேங்குவதாக கூறப்படுகிறது. பெரியார் நகர் ஜெகநாதன் தெரு, பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரி வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

வில்லிவாக்கம் பாபா நகர் பால விநாயகர் ஆலயம் அமைந்துள்ள பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த பகுதியின் பெரும்பாலான வீடுகளில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இன்றி மக்கள் அவதி அடைந்து வருவதாக அந்த பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் தெரிவித்தார். சென்னை ராஜாஜி நகர் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலக வளாகத்திலும் முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கி உள்ளது.

பெரம்பூர் ஜமாலியா ஸ்டீபன்சன் சாலையானது மழை நீரால் அரிக்கப்பட்டு, பெரிய அளவிலான விரிசலுடன் சாலை சரிந்து உள்ளது. இது அங்கு போக்குவரத்துக்கு பெரிதும் சிரமத்தை உண்டாக்கி உள்ளது.

சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள விவேக் அக்பர் அவென்யூ, மகா மேர் நகர் போன்ற பகுதிகள் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு தீவு போல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள தண்ணீர் வடகரை கூவத்தில் கலப்பதற்கு வழியில்லாமல் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்றுவதே தேங்கிய நீரை அகற்றுவதற்கான நிரந்தர தீர்வாக அமையும் என்று அந்த பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

வியாசர்பாடி முல்லை நகர் பகுதி சாலையில் தேங்கி உள்ள மழைநீர் வடியாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. கொடுங்கையூர்-தண்டையார் பேட்டை நெடுஞ்சாலையிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்று மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும் என்று அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News