ஆன்மிகம்
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு தீபாராதனை நடைபெற்ற போது எடுத்த படம்.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் குருப்பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2020-11-16 07:43 GMT   |   Update On 2020-11-16 07:43 GMT
குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்ததையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவில் குருப்பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தஞ்சை அருகே திட்டை என்று அழைக்கப்படும் தென்குடிதிட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

குருபகவான் ஒரு முழு சுபகிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்பதும், குரு பார்க்க கோடி தோஷம் விலகும் என்பதும் ஐதீகம் ஆகும். மற்ற எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.

திட்டை கோவிலில் குருபகவான் வசிஷ்டேஸ்வரர்- சுகுந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவே எங்கு இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார். அதன்படி இந்த ஆண்டு நேற்று இரவு 9.48 மணிக்கு குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரை குருப்பெயர்ச்சிக்கான சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இரவு 8.45 மணி முதல் 9.15 மணிக்குள் கடம்புறப்பாடும், 9.15 மணி முதல் 9.30 மணி வரை குருபகவானுக்கு அலங்காரமும், 9.30 மணி முதல் 9.45 மணி வரை பூஜைகளும் நடைபெற்றது. இரவு 9.48 மணிக்கு குருப்பெயர்ச்சி தீபாராதனை நடைபெற்றது

இதையொட்டி குருபகவானுக்கு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக தடை உத்தரவு அமலில் உள்ளதால் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகளின்படி சிறப்பு யாகம், கடம்புறப்பாடு, குரு அபிஷேகம், குருப்பெயர்ச்சி தீபாராதனை ஆகியவற்றில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

குருப்பெயர்ச்சி முடிந்த பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். மேலும் பக்தர்கள் நெரிசல் இன்றி சமூக இடைவெளியுடன் சென்று தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கம்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு ஒரு வழியும், தரிசனம் முடிந்தவுடன் வெளியே வருவதற்கு ஒரு வழியும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. கோவில் குளத்தை சுற்றிலும் தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்ய தானியங்கி எந்திரம் வைக்கப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News