உள்ளூர் செய்திகள்
தேரோட்டம்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நாளை தேரோட்டம்

Published On 2022-04-15 11:18 GMT   |   Update On 2022-04-15 11:18 GMT
கோவில் நிர்வாகம் சார்பில் தேரடி வீதியில் நின்று கொண்டிருந்த தேரை கோவில் ஊழியர்கள் முழுவதுமாக சுத்தம் செய்து வண்ண மலர்களாலும், வண்ண ஆடைகளிலும் அலங்காரம் செய்யப்பட்டு கம்பீரமாக உள்ளது.
கடலூர்:

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8- ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்று வருகின்றன.

கடந்த 12 -ந் தேதி கருட சேவை உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை (16 -ந் தேதி) முக்கிய விழாவான தேர் திருவிழா காலை 6.10 மணிக்கு மேல் தொடங்கப்பட்டு நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து, திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் தேரடி வீதியில் நின்று கொண்டிருந்த தேரை கோவில் ஊழியர்கள் முழுவதுமாக சுத்தம் செய்து வண்ண மலர்களாலும், வண்ண ஆடைகளிலும் அலங்காரம் செய்யப்பட்டு கம்பீரமாக உள்ளது.

நாளை காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

மேலும் முக்கிய மாட வீதியில் உள்ள கடைகள் உள்ளிட்டவைகளை கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றி தேர்த்திருவிழா நடைபெறுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டு உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News