செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

இமாசல பிரதேச சட்டசபையில் இன்று ஜனாதிபதி பேசுகிறார்

Published On 2021-09-17 00:00 GMT   |   Update On 2021-09-17 00:00 GMT
இமாசல பிரதேசத்திற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சிம்லா சென்றடைந்தார்.
சிம்லா:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இமாசல பிரதேசத்திற்கு 4 நாள் சுற்றுப்பயணம் செல்கிறார். இதற்காக நேற்று சிம்லா சென்று அடைந்தார். அந்த மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் மற்றும் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளித்தனர்.

ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக்கிழமை), சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரில் பேசுகிறார். இமாசல பிரதேசம் மாநிலமாக உதயமாகி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழா ஆண்டு சிறப்பு சட்டசபை கூட்டத் தொடராக இது நடைபெறுகிறது. இதில் நடப்பு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 93 பேர், முன்னாள் முதல் மந்திரிகள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கிறார்கள். 

இந்த மாநில சட்டசபையில் பேசும் 3-வது ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல்கலாம் 2003-ம் ஆண்டிலும், பிரணாப் முகர்ஜி 2013-ம் ஆண்டிலும் இங்கு பேசியிருப்பதாக சபாநாயகர் விபின் சிங் பர்மார் கூறினார்.

Tags:    

Similar News