லைஃப்ஸ்டைல்
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட பத்து வழிகள்

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட ‘பத்து வழிகள்’

Published On 2019-10-26 03:42 GMT   |   Update On 2019-10-26 03:51 GMT
தீபாவளி மகிழ்ச்சியான பண்டிகையாக கழிய, நாம் பட்டாசுகளை மிக பாதுகாப்பாக வெடிக்கவேண்டும். அப்படி தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட பத்து வழிகள் இதோ...
தீபாவளி மகிழ்ச்சியான பண்டிகையாக கழிய, நாம் பட்டாசுகளை மிக பாதுகாப்பாக வெடிக்கவேண்டும். இல்லையேல், மகிழ்ச்சியான பண்டிகை, பலருக்கும் மறக்கமுடியாத வேதனையை பரிசளித்துவிடும். அப்படி தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட பத்து வழிகள் இதோ...

1. வயதிற்கு ஏற்ற வெடிகளை வாங்கிக்கொடுங்கள். சிறுவயதினருக்கு அணுகுண்டு, புல்லட் வெடி, ராக்கெட் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

2. பெரும்பாலும் பெரிய மைதானங்களுக்குச் சென்று, எச்சரிக்கையுடன் பட்டாசு வெடிப்பது சிறந்தது. பட்டாசு வெடிக்கையில், சிறுவர்களின் அருகில் பெற்றோர் நிற்பது சிறந்தது.

3. தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்கி உடுத்தியிருந்தாலும், பட்டாசு வெடிக்கையில் காட்டன் துணிகளை உடுத்தியிருப்பது நல்லது.

4. நனைந்த துணியில் சீக்கிரம் தீப்பற்றாது என்பதால், தீபாவளியன்று மழை பெய்தால், நனைந்தபடி வெடி வெடியுங்கள்.

5. பட்டாசு வெடிக்கும்போது ஒரு பக்கெட் தண்ணீரை அருகில் வைத்து கொள்வது சிறப்பானது. விபத்து ஏற்பட்டால், உடனே தண்ணீரை ஊற்றி அணைக்கலாம்.

6. பட்டாசு வெடிக்கையில், வெளிப்படும் புகையை சுவாசிப்பது நல்லதல்ல. குறிப்பாக ஆஸ்துமா, நுரையீரல் அலர்ஜி, நுரையீரல் நோயுள்ளவர்கள் பட்டாசு புகையை தவிர்ப்பது நல்லது.

7. கையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு, கொளுத்திப்போடுவது மிக மிக ஆபத்தான விஷயம். இம் மாதிரி பட்டாசு வெடிக்கையில்தான், உடலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும். அதனால் கையில் பட்டாசு கொளுத்துவதை தவிருங்கள். பெரியவர்களே சிறியவர்களுக்கு முன் மாதிரி என்பதால், இந்த பழக்கத்தை பெரியவர்களும் தவிர்க்கவேண்டும்.



8. வெடி வெடிக்கையில் உடலில் தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீர் ஊற்றக்கூடாது என்று சிலரும், தண்ணீர் ஊற்றலாம் என்று சிலரும் கூறுவார்கள். இதில் குழப்பமே வேண்டாம். தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்றலாம். தப்பில்லை. தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்றுவதால், தோலில் ஏற்படும் சூடு குறையும். காயத்தின் ஆழம் அதிகமாகாது.

9. தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்றுவதாலோ அல்லது தண்ணீருக்குள் கை, கால்களை முக்குவதாலோ கொப்பளம் உண்டாகலாம். கொப்பளங்கள் வந்தாலும் பயப்பட வேண்டாம். அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்து கொள்ளலாம்.

10. தீக்காயங்களுக்கு ஆயின்மெண்ட் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், நீல மருந்து, இங்க், வாழைத்தண்டு சாறு என பல திரவங்களை தீக்காயத்தின் மீது ஊற்றியது உண்டு. ஆனால் இப்பொழுது ‘சில்வர் சல்பாடயஸின்’ போன்ற மருந்துகள் காயத்தின் மீது தடவுவதற்கு உபயோகப்படுத்துவதால், தீப்புண் சீக்கிரம் ஆறிவிடும்.

தீக்காய அளவீடு

தலை- 9%

நெஞ்சு, வயிறு-36%

2 கைகள்-18%

2 கால்கள்-36%

இனப்பெருக்க பகுதி-1%

உடலில் தீக்காயம் ஏற்பட்டால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை, இந்த பட்டியலை கொண்டுதான் மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள். சுமார் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டால் ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதுகிறார்கள்.

டாக்டர். எஸ்.அமுதகுமார், சென்னை. 
Tags:    

Similar News