செய்திகள்
காட்டுயானையால் சேதமான வாழைகளை படத்தில் காணலாம்

கூடலூரில் காட்டுயானை அட்டகாசம்: 350 வாழைகள் சேதம்- விவசாயிகள் கவலை

Published On 2020-12-26 17:28 GMT   |   Update On 2020-12-26 17:28 GMT
கூடலூரில் காட்டுயானை அட்டகாசத்தால், 350 வாழைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காயத்துடன் காட்டுயானை ஒன்று சுற்றி வருகிறது. அந்த யானை கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்குள் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே அந்த யானைக்கு உரிய சிகிச்சை அளித்து அடர்ந்த வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் விசாலாட்சி பகுதி அருகே துப்புக்குட்டிபேட்டையில் விவசாயிகள் பலர் வாழைகள் பயிரிட்டு உள்ளனர். நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல தங்களது தோட்டங்களுக்கு செல்வதற்காக விவசாயிகள் வந்தனர். அப்போது காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானை தோட்டத்துக்குள் நின்றவாறு பாதுகாப்புக்காக போடப்பட்ட வலைகளை சரித்து போட்டு வாழைகளை சாப்பிட்டு கொண்டிருந்தது.

இதைக்கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கீர்த்தி, ராஜன் உள்ளிட்ட சில விவசாயிகள் பயிரிட்டுள்ள சுமார் 350-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர், அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டனர்.

அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் காட்டுயானை ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, காயத்துடன் சுற்றி வரும் காட்டுயானை நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து விடிய விடிய வாழைகளை தின்று நாசம் செய்து விட்டது. நஷ்டத்துக்கு ஏற்ப வனத்துறையும் இழப்பீடு தருவதில்லை என்று குற்றம் சாட்டினர்.
Tags:    

Similar News