செய்திகள்
பள்ளத்தில் விழுந்த காரை கிரேன் மூலம் மீட்கும் காட்சி.

‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்

Published On 2018-12-08 08:14 GMT   |   Update On 2018-12-08 08:14 GMT
திருச்சூரில் இருந்து மூணாறுக்கு ‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #GoogleMaps #Caraccident
திருவனந்தபுரம்:

திருச்சூர் வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர்கள் கோகுல்தாஸ், (வயது 23). ஈசாக் (29), முஸ்தபா (36).

3 வாலிபர்களும் கடந்த வியாழக்கிழமை காரில் திருச்சூரில் இருந்து மூணாறுக்கு புறப்பட்டனர். சரியான வழி தெரியாததால் ‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது கார் மூணாறு அருகே பாலமட்டம்- அவழிச்சல் சாலையில் சென்று கொண்டிருந்தது.

நள்ளிரவு நேரத்தில் ‘கூகுள் மேப்’பை பார்த்தபடி கார் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அவழிச்சல் அருகே சென்ற போது சாலையில் பெரும் பள்ளம் இருப்பதை கண்டனர்.

காரை நிறுத்த முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. காரில் இருந்த 3 பேரும் காருடன் பள்ளத்தில் விழுந்தனர்.

30 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் சுமார் 8 அடி தண்ணீர் இருந்தது. இதனால் வாலிபர்கள் மூவரும் காரின் மேற்பகுதியை பிடித்தபடி உதவிக்கேட்டு கூச்சலிட்டனர்.

30 அடி ஆழம் கொண்ட பள்ளம்.

அப்போது அந்த வழியாக ரப்பர் தோட்ட தொழிலாளிகள் சிலர் இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பள்ளத்தில் இருந்து கூச்சல் வந்ததை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். அங்கு காரை பிடித்தபடி 3 வாலிபர்கள் உயிருக்கு போராடுவதை கண்டனர்.

தொழிலாளிகள் அனைவரும் பள்ளத்தில் விழுந்த வாலிபர்களை பத்திரமாக மீட்டனர். இதற்காக அவர்கள், அணிந்திருந்த வேட்டியை கழட்டி கயிறு போல் ஆக்கி அதன் மூலம் வாலிபர்களை வெளியே அழைத்து வந்தனர்.

வாலிபர்கள் மூவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினர். பள்ளத்தில் விழுந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

3 வாலிபர்கள் பள்ளத்தில் விழுந்து மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் இன்னொரு குடும்பமும் மூணாறு செல்ல ‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி இதே பாதையில் வந்தது.

கிராம மக்கள் அவர்களை தடுத்து நடந்த சம்பவத்தை கூறி மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தினர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, திருச்சூர்-மூணாறு செல்ல ‘கூகுள் மேப்’பில் வழி தேடினால் இந்த பாதைதான் வருகிறது. ஆனால் இங்கு 30 அடி ஆழ பள்ளம் இருப்பது உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரியும்.

இதுபற்றி பிரதான சாலையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்க நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதை தடுக்க முடியாது என்றனர்.  #GoogleMaps #Caraccident





Tags:    

Similar News