செய்திகள்
கைது

விவசாயியிடம் ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கைது

Published On 2021-11-25 13:43 GMT   |   Update On 2021-11-25 13:43 GMT
சின்னசேலம் அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கைது செய்யப்பட்டார். இவருடன் கிராம நிர்வாக உதவியாளரும் சிக்கினார்.
சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் வடக்கு காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெயராமன் (வயது 36). விவசாயி. இவரது சகோதரர்கள் ஏழுமலை, நல்லதம்பி. இவர்கள் 3 பேரும் தங்களது பெயரில் உள்ள நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையவழி மூலம் விண்ணப்பித்து, அதற்கான ரசீதையும் பெற்றனர். இதனை தொடர்ந்து அந்த ரசீதை நைனார்பாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து, பட்டா மாற்றம் செய்வதற்காக வழிமுறைகள் குறித்து கேட்டனர். அதற்கு அவர், பட்டா மாற்றம் செய்ய நில அளவையர் நேரில் வந்து அளக்க வேண்டும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நைனார்பாளையம் குறுவட்ட நில அளவையராக பணிபுரியும் சேலம் மாவட்டம் ஆறகலூரை சேர்ந்த சூர்யா(29) என்பவரை ஜெயராமன் அணுகினார். அதற்கு நில அளவையர் சூர்யா, பட்டா பெயர் மாற்றம் செய்ய தலா ரூ.8 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் தர வேண்டும். இதற்காக 24-ந் தேதி(அதாவது நேற்று) நிலத்தை அளக்க நேரில் வருவதாகவும், அன்றைய தினமே பணத்தை கொடுத்ததும் நிலத்தை அளந்து தருவதாகவும் கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயராமன், விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய ரூ.24 ஆயிரத்துடன் ஜெயராமன் நேற்று தனது நிலத்தில் காத்திருந்தார். அங்கு வந்த நில அளவையர் சூர்யா, நைனார்பாளையம் கிராம நிர்வாக உதவியாளரான பெரம்பலூர் மாவட்டம் சிறு நிலா பகுதியை சேர்ந்த சுசீலா(35) ஆகியோரிடம் ஜெயராமன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஏட்டுகள் பாலமுருகன், விஜயதாஸ், நரசிம்மராவ் ஆகியோர் பாய்ந்து சென்று நில அளவையர் சூர்யா, கிராம உதவியாளர் சுசீலா ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Tags:    

Similar News