ஆன்மிகம்
மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகாதீப கொப்பரை.

திருவண்ணாமலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது

Published On 2021-11-18 05:54 GMT   |   Update On 2021-11-18 05:54 GMT
திருவண்ணாமலை மகா தீபத்தை நாளை காண பக்தர்கள் அனைவரும் ஆவலில் உள்ளனர். தீப விழாவையொட்டி திருவண்ணாமலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உச்ச நிகழ்வாக நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை கோவில் வளாகத்தில் பரணி தீபமும், சரியாக மாலை 6 மணிக்கு 2,668 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள், பிரகாரத்தில் சுவாமி-அம்மன் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று பிச்சாண்டவர் உற்சவம் மேலும் தீபத்துக்கான காடா துணிகள் கொண்டு வரப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகளின காரணமாக திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

இந்த நிலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று 9-ஆம் திருவிழாவை முன்னிட்டு தீபக்கொப்பரைக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து 2,668 அடி உயரத்தில் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகா தீப கொப்பரை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆண்டு புதிய கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. புதிய மகாதீப கொப்பரையை பக்தர்கள் அண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்ல புறப்பட்டபோது “அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா “என்ற பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.

திருவண்ணாமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப் பகுதிகள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் அண்ணாமலையாரை மனதில் தியானித்தபடி மகா தீப கொப்பரையை தூக்கிக் கொண்டு மலை ஏறிச் சென்றனர்.

திருவண்ணாமலை மகா தீபத்தை நாளை காண பக்தர்கள் அனைவரும் ஆவலில் உள்ளனர். தீப விழாவையொட்டி திருவண்ணாமலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் 9 சாலைகளிலும் போலீசார் தடுப்புகள் வைத்து பக்தர்கள் வருவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News