செய்திகள்
உயிரிழந்த மகன்-தந்தை

சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசாரணை- 10 பேரிடம் வாக்குமூலம் பெற்றனர்

Published On 2020-09-16 01:54 GMT   |   Update On 2020-09-16 01:54 GMT
தந்தை-மகன் மரண வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 10 பேரிடம் வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர்.
சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தார்கள். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். வியாபாரிகளின் குடும்பத்தினர், நண்பர்கள், போலீசார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டது. பின்னர், கடந்த 2 வாரமாக மீண்டும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று திடீரென வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு வந்தனர். அங்கு வீட்டில் யாரும் இல்லாததால், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் பென்னிக்சின் நண்பரான மணிமாறன் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்த 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது 10 பேர் அளித்த வாக்குமூலத்தை அவர்கள் பதிவு செய்து கொண்டார்கள். முன்னதாக, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கடைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.
Tags:    

Similar News