செய்திகள்
விராட் கோலி

இலங்கைக்கு எதிரான த்ரில் வெற்றி- இங்கிலாந்திலிருந்து உற்சாகத்துடன் கண்டுகளித்த விராட் கோலி அண்ட் கோ

Published On 2021-07-21 08:41 GMT   |   Update On 2021-07-21 10:14 GMT
276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
இலங்கைக்குப் பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்ற நிலையில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுத் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 275 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் சாரித் அஸலாங்கா அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்காக சாஹல், அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரித்வி ஷா, 13 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேற, கேப்டன் ஷிகர் தவான் 29 ரன்களுக்குப் பெவிலியன் திரும்பினார். அதற்கடுத்து வந்த இஷன் கிஷன், 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்ந்து வந்த மணிஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சற்று நிதானமாக பேட்டிங் செய்து முறையே 37 மற்றும் 53 ரன்கள் எடுத்தனர்.


ஆனால் அவர்களும் விக்கெட்டுகளை இழக்க கடைசியில் தீபக் சஹார் மற்றும் புவ்னேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தனர். கடைசி ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. தீபக் சஹார் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் முகாமிட்டிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள், இரண்டாவது ஒருநாள் போட்டியை உற்சாகம் ததும்ப பார்த்துள்ளனர். இது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.
Tags:    

Similar News