செய்திகள்
கோப்புபடம்

தையல் பயிற்சி முடித்து திருப்பூர் வரும் ஒடிசா தொழிலாளர்கள்

Published On 2021-09-15 04:25 GMT   |   Update On 2021-09-15 04:25 GMT
ஆர்டர் வருகை அதிகரிப்பால் திருப்பூர் நிறுவனங்களின் தொழிலாளர் தேவை அதிகரித்துள்ளது.
திருப்பூர்:

பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிவதற்காக ஒடிசாவில் இருந்து பயிற்சி முடித்த தொழிலாளர்கள் அதிகளவில் திருப்பூர் நோக்கி வர துவங்கியுள்ளனர்.

மத்திய அரசின் ‘தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,)’ திட்டத்தில் ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கும் மையங்கள் ஒடிசாவில் ஏராளம் உள்ளன. இங்கு தொழிலாளர்களுக்கு 45 நாட்கள் இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இடம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மையம் திருப்பூரில் இயங்குகிறது. இம்மையம் பயிற்சி முடித்த ஒடிசா தொழிலாளரை பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணியமர்த்துவது, தொழிலாளர் பிரச்சினைகளை கண்டறிந்து சரி செய்யும் பணிகளை மேற்கொள்கிறது.

இதுகுறித்து இடம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மைய மேலாளர் ராமசாமி கூறியதாவது:

கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஒடிசாவில் உள்ள மையங்களில் தையல் பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளது. பயிற்சி முடித்து புதிய தொழிலாளர்கள் திருப்பூருக்கு வர துவங்கி விட்டனர். 

அடுத்த 15 நாட்களில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி மையங்களிலேயே தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடுகிறது. 

ஆர்டர் வருகை அதிகரிப்பால் திருப்பூர் நிறுவனங்களின் தொழிலாளர் தேவை அதிகரித்துள்ளது. ஒடிசாவிலிருந்து தொழிலாளர்கள் ரெயிலில் திருப்பூர் வந்திறங்குகின்றனர். சில நிறுவனங்கள் தொழிலாளர்களை விமானத்தில் அழைத்துவர ஏற்பாடு செய்கின்றன.

தற்போதைய சூழல்களை கருதி கேரளா வழி பயணத்தை தவிர்க்க தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் திருப்பூரில் இருந்து வடமாநிலத்துக்கு ரெயில் மூலம் பலர் பயணித்தனர். 

தற்போது திருப்பூரில் இயல்பு  நிலை திரும்பி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நிறுவனங்கள் முழு வேகத்துடன் உற்பத்தியை தொடங்கி உள்ளதால், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. 

இதனால் இங்கிருந்து உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,  மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வடமாநிலத்துக்கு பயணிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

வழக்கமாக ரெயிலில் முன்பதிவு டிக்கெட் பெற காலை  6 மணி முதல் ரெயில்வே நிலைய ‘தட்கல்’ கவுன்டரில் வடமாநிலத்தினர் காத்திருப்பர்.

சில நாட்களாக ஞாயிற்றுக்கிழமை தவிர, பிற நாட்களில் ‘தட்கல்’ முன்பதிவு கவுன்டரில் கூட்டமில்லை. அதே நேரம் பிற மாநிலங்களில் இருந்து திருப்பூர் வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
Tags:    

Similar News