செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்வதற்கு இந்துமதி அவரது கணவருடன் ஓடோடி வந்த காட்சி.

சினிமா பாணியில் கணவருடன் மூச்சுவாங்க ஓடிச்சென்று மனுதாக்கல் செய்த இளம்பெண்

Published On 2021-09-23 07:00 GMT   |   Update On 2021-09-23 08:12 GMT
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடையும் என்பதால் இந்துமதியும், பாண்டியனும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வேகமாக ஓடிச் சென்றனர்.
ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட மலை கிராமமான நாயக்கனேரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 3,440 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9-வார்டுகள் உள்ளன.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள மலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்த நாயக்கனேரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள தேவதாஸ் என்பவரது மனைவி பியூலா (வயது42) வேட்புமனு தாக்கல் செய்தார். மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டிருந்த கிராம மக்கள் அவரிடம் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பியூலா மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கிராம மக்களிடம் தெரிவித்து விட்டு சென்றுவிட்டார்.

மாலை 5 மணிக்கு மேல் நாயக்கனேரி ஊராட்சியை சேர்ந்த இந்துமதி (வயது22)என்பவர் அவரது கணவர் பாண்டியனுடன் மனுத்தாக்கல் செய்ய வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் திடீரென ஒன்று சேர்ந்து அவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.


மேலும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை மீறி அங்கிருந்த இந்துமதி மற்றும் அவரது கணவரை உள்ளே அனுமதித்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடையும்  என்பதால் இந்துமதியும், பாண்டியனும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வேகமாக ஓடிச் சென்றனர்.



ஓட முடியாத இந்துமதியை அவரது கணவர் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாக சென்றார். வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு ஓடி சென்று  தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முன்பு இருக்கையில் அமர்ந்தனர். ஓடிவந்ததால் மூச்சு வாங்கியபடி மனுதாக்கல் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களை அங்கிருந்த அதிகாரி ஆசுவாசப்படுத்தினார்.

இந்த காட்சிகள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பரிதாபமாக இருந்தது. மனுத்தாக்கல் செய்த பணிகள் நிறைவடைந்து தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். கிராம மக்கள் எதிர்ப்பை மீறி மனு தாக்கல் செய்த இளம்பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த ஊராட்சியில் பியூலா, இந்துமதி ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு நேற்று மாலை 5 மணி வரை ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை.

இதுகுறித்து இந்துமதி கூறியதாவது:-

நான் நாயக்கனேரி ஊராட்சி பகுதியில் உள்ள காமனூர்தட்டு பகுதியிலுள்ள பாண்டியன் என்ற மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டேன்.

அவருடன் வாழ்ந்து வந்த நிலையில் தேர்தல் ஆணையம் நாயக்கனேரி ஊராட்சி பகுதிக்கு ஆதிதிராவிடர் பெண் போட்டியிட அறிவித்ததால் நான் போட்டியிட முயற்சி செய்தேன். அதை தடுப்பதற்காக கிராம மக்கள் தொடர்ந்து எங்களுக்கு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் நான் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பம் செய்திருந்தேன். அதையும் எனக்கு கொடுக்க கூடாது என்று நேற்று வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புகார் மனு கொடுத்தனர்.

தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் நான் அந்த பதவிக்கு போட்டியிட மனு அளித்துள்ளேன். ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு பணியாற்றுவேன். நாளை மனு பரிசீலனை செய்யப்பட்டு அதிகாரிகள் முடிவை அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News