உள்ளூர் செய்திகள்
சென்னை ஐகோர்ட்

உள்ளாட்சி தேர்தல் குறித்து முன்னாள் அமைச்சர் வழக்கு- தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-12-20 07:21 GMT   |   Update On 2021-12-20 07:21 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தக் கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

15 மாநகராட்சிகளில் உள்ள 1064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள 3, 468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் மனுவில் ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுக தொடர்ந்த வழக்கில்,

அனைத்து வாக்கு சாவடி, வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை ஐகோர்ட்டு பிறப்பித்தும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறியது.

உரிய காரணமின்றி அதிமுகவினரின் வேட்புமனு நிராகரிப்பு, பணம் விநியோகம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தேர்தல் அலுவலர்களோடு கூட்டம் என முறைகேடுகள் நடைபெற்றது.

எனவே தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் 20ந் தேதி கவர்னரிடம், மனு கொடுத்தோம். ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்றுவிட கூடாதென நவம்பர் 1ந்தேதி மாநில தேர்தல் ஆணையத்திடமும் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும். ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் நடவடிக்கைகள் முழுவதும் சிசிடிவி பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவம் பயன்படுத்த வேண்டும்.

தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க. 2006-2007 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஐகோர்ட்டு தலையிட்டு ஒரு வார்டின் தேர்தலை நிறுத்தி உத்தரவிட்டது.

தற்போது, அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரீசிலித்து அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். அப்போது அதிமுக தரப்பில் விஜய் நாராயண் ஆஜராகி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை நகர்புற தேர்தலிலும் பின்பற்ற உத்தரவிட வேண்டும். வேட்புமனுவில் கூடுதலாக இணைக்கப்பட்ட பக்கங்கள் கிழிக்கப்பட்டு அல்லது மாயமாகி, அதனால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

எனவே எத்தனை பக்கங்கள் உள்ளது என்பதற்கான சான்றளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், இதுதொடர்பாக ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும். அதேசமயம் ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் முறையாக பின்பற்றப்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Tags:    

Similar News