ஆன்மிகம்
ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

நாளை முதல் 17-ந்தேதி வரை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை

Published On 2021-10-04 07:24 GMT   |   Update On 2021-10-04 07:24 GMT
கோவில் வளாகத்தில் சுவாமி உள்புறப்பாடு நடைபெறும் நேரத்தை தவிர்த்து, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தேசிகர் பிரம்மோற்சவத்தையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 17-ந் தேதி வரை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை தேசிகர் பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையான கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி கோவில் பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டு, கோவில் வளாகத்திற்குள் குறைந்தளவு பணியாளர்களை கொண்டு சாமி உள்புறப்பாடு நடைபெறும்.மேலும் பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், கொரோனா நோய் தொற்றுக்கு வழிவகுக்கும். அதனால் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் 17-ந் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு தடை செய்யப்படுகிறது.

ஆனால் மேற்படி திருவிழா காலத்தில் கோவில் வளாகத்தில் சுவாமி உள்புறப்பாடு நடைபெறும் நேரத்தை தவிர்த்து, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை கருதியும் வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் அரசு உத்தரவுபடி ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கான தடை உத்தரவு என்பது தொடரும். அந்நாட்களிலும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

எனவே நாளை முதல் 17-ந் தேதி வரையிலான விழா காலகட்டங்களில் சிறப்பு தரிசனத்தின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் பட்சத்தில் முழுவதுமாக பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News