ஆன்மிகம்
நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடந்ததை படத்தில் காணலாம்.

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2021-11-03 04:54 GMT   |   Update On 2021-11-03 04:54 GMT
நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழாவில், சுவாமி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஐப்பசி திருக்கல்யாண விழாவும் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, மாலையில் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் தவக்கோலத்தில் இருந்த காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் இருவரும் கோவிலுக்கு வந்தனர்.

நேற்று அதிகாலை கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

பின்னர் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க மாப்பிள்ளை திருக்கோலத்தில் சுவாமி நெல்லையப்பர், தங்கப்பல்லக்கில் சுவாமி சன்னதியில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நெல்லை கோவிந்தசுவாமி, நெல்லையப்பருக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளி இருந்த காந்திமதி அம்பாளுக்கும், சுவாமி நெல்லையப்பருக்கும் சிறப்பு பூஜைகளும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட திருமாங்கல்யம், சுவாமி நெல்லையப்பர் கைகளில் வைத்து பூஜை செய்யப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

இதேபோல் நெல்லையில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் ஜப்பசி திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்றது.
Tags:    

Similar News