செய்திகள்
கோப்புபடம்

தற்காலிக மின் இணைப்பை நிரந்தர வீட்டு இணைப்பாக மாற்ற வேண்டும் - தொ.மு.ச., வலியுறுத்தல்

Published On 2021-09-17 04:00 GMT   |   Update On 2021-09-17 04:00 GMT
சாதாரணமாக ரூ.500 வர வேண்டிய மின்கட்டணம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் கோட்ட அளவிலான, மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் குமார் நகர் மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமை வகித்தார். கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன் பங்கேற்றார். 

மின்வாரிய தொ.மு.ச., சார்பில், செயலாளர் சரவணன் கொடுத்த மனுவில், திருப்பூரில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்களுக்கும் விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.

புதிய கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்று பெறுவதை மின்வாரியம் கட்டாயமாக்கியுள்ளது. இதனால் திருப்பூர் பகுதியில் மட்டும் 500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு வழங்கிய தற்காலிக மின் இணைப்பை நிரந்தர வீட்டு இணைப்பாக மாற்ற வேண்டும். சாதாரணமாக, ரூ.500  வர வேண்டிய கட்டணம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வருகிறது. 

எனவே தற்காலிக இணைப்புகளை விரைவில் வீட்டு இணைப்பாக மாற்ற வேண்டும். குறிப்பாக, கட்டிட பணி நிறைவு சான்று பெறுவதை கட்டாயமாக்கும் உத்தரவை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News