செய்திகள்
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங்

புதுவை மாநிலத்தில் 233 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

Published On 2021-02-27 04:01 GMT   |   Update On 2021-02-27 04:01 GMT
புதுவை மாநிலத்தில் 233 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் கூறினார்.
புதுச்சேரி:

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று (அதாவது நேற்று) முதல் அமலுக்கு வந்தது. இது தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும்.

புதுவையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்கள், பேனர்கள் அகற்றப்படும். பொது இடங்களில் வேட்பாளரின் சின்னம் மற்றும் பெயர் தொடர்பாக எழுதவோ, படம் வரையவோ கூடாது. அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில், பிரசாரங்களில் பங்கேற்கக் கூடாது. இது தொடர்பாக புகார் வந்தால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் 10 லட்சத்து 2 ஆயிரத்து 414 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 71 ஆயிரத்து 863 பேர் ஆண்கள். 5 லட்சத்து 30 ஆயிரத்து 438 பெண்கள். 113 பேர் மூன்றாம் பாலினத்தவர். 352 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். 303 பாதுகாப்பு படையினர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட புதிய வாக்காளர்கள் பட்டியல் தனியாக வெளியிடப்படும்.

புதுவை மாநிலத்தில் 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வாக்குச்சாவடிகளில் எண்ணிக்கை 1,559 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 9,140 அரசு ஊழியர்களும், 3 ஆயிரத்து 98 போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

புதுவையில் 154 கிராமங்களில் உள்ள 233 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதில் 16 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்தம் 36 சோதனைச்சாவடிகள் அமைத்து, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு பணியில் 10 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கெனவே 6 கம்பெனி துணை ராணுவப் படையினர் புதுவைக்கு வந்துள்ளனர். தேவைப்பட்டால் கூடுதலாக துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நேற்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தததை தொடர்ந்து புதுவையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர பதாகைகளை போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் இணைந்து அகற்றினர்.
Tags:    

Similar News