தொழில்நுட்பம்
ஆப்பிள் ஹோம்பாட்

இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்

Published On 2020-01-29 05:48 GMT   |   Update On 2020-01-29 05:48 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் ஒ.எஸ். 13.3.1 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் இந்தியாவுக்கான ஆங்கில மொழி சிரி குரல்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் முன்னதாக 2017 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானதும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 2018-ம் ஆண்டு முதல் விற்பனை துவங்கியது. இதன் விலை முன்னதாக 349 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 24,860) என நிர்ணயம் செய்யப்பட்டு பின் விலை குறைக்கப்பட்டு 299 டால்ர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 21,300) என மாற்றப்பட்டது.



புதிய ஹோம்பாட் 7 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை குரல் வழியே இயக்க முடியும். இதை கொண்டு இசை, செய்திகள் மற்றும் வீட்டில் உள்ள கனெக்ட்டெட் சாதனங்களை இயக்க முடியும். இதில் உள்ள சென்சார்கள் ஸ்பீக்கர் வீட்டில் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப ஆடியோ அளவுகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

இதில் மொத்தம் ஆறு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இது பரிந்துரைகளை அறிந்து கொண்டு இசை சார்ந்த தேடல்களில் பதில்களை அதிவேகமாக வழங்குகிறது. ஹோம்பாட் மாடல் ஏ8 சிப் கொண்டிருக்கிறது. இதில் பயனர்களின் உரையாடல்கள் அனைத்தும் சாதனத்திலேயே சேமிக்கப்பட்டு, அவை முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன.

இதில் ஆப்பிள் உருவாக்கிய ஊஃபர் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரத்தை மேம்படுத்தி தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒப்பிடும் போது ஆப்பிள் ஹோம்பாட் விலை இந்தியாவில் மட்டும் மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News