செய்திகள்
கோப்புபடம்

ஓட்டப்பிடாரத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல் - அ.தி.மு.க.- தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு

Published On 2021-04-05 08:28 GMT   |   Update On 2021-04-05 08:28 GMT
ஓட்டப்பிடாரம் அருகே ரூ.6 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் குறித்து அதிமுக திமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓட்டப்பிடாரம்:

சட்டமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை வேளாண்மை உதவி இயக்குனர் முத்துக்குமார் காளிதாஸ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசனூத்து பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 180 எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக வேன் டிரைவரான ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த அருண்குமார் (வயது28), அ.தி.மு.க. நிர்வாகிகள் கீழமங்கலத்தை சேர்ந்த கண்ணன், வேலாயுதபுரத்தை சேர்ந்த ஜெயராம் (32) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் நேற்றிரவு முத்துக்குமார் காளிதாஸ் தலைமையிலான பறக்கும் படையினர் சிலோன் காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தி.மு.க. நிர்வாகிகள் ரவீந்திரகுமார் (33) ராஜா, கலைமணி ஆகியோர் ஆவணங்ககள் இல்லாமல் ரூ.25 ஆயிரம் எடுத்து சென்றது தெரிய வந்தது. அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News