செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் - ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி தகவல்

Published On 2021-01-26 21:01 GMT   |   Update On 2021-01-26 21:01 GMT
இந்தியாவில் இருந்து 9 வெளிநாடுகளுக்கு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
நியூயார்க்:

இந்தியாவில் இருந்து 9 வெளிநாடுகளுக்கு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. மேலும் பல நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பல கட்டமாக தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில், ‘சர்வதேச அமைதி, பாதுகாப்பை பராமரித்தல்: 2532 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்த தொடர் ஆய்வு’ என்ற தலைப்பிலான நிகழ்வு நேற்று நடைபெற்றது.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு ஒன்றிணைந்து உதவும் வகையில் சர்வதேச போர்நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதற்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலையில் 2532 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பான நிகழ்வில் ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தரப் பிரதிநிதி கே.நாகராஜ் நாயுடு பங்கேற்றுப் பேசியதாவது:-

‘உலகிலேயே அதிகம் தடுப்பூசி தயாரிக்கும் நாடாக, இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் வினியோகத் திறன், ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் பலனளிக்க வேண்டும் என்ற பொறுப்பை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

முதல்கட்டமாக, ஏற்கனவே 9 நாடுகளுக்கு 60 லட்சம் தடுப்பூசிகளுக்கு மேல் உதவியாக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பல நாடுகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் பல கட்டமாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி அமைப்புக்கும் நாங்கள் படிப்படியாக தடுப்பூசிகளை அனுப்பிவைப்போம்.

பல பங்குதாரர் நாடுகளின் மருத்துவ சிகிச்சை திறன்களையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திறனையும் அதிகரிப்பதற்கான பயிற்சியையும் இந்தியா அளித்திருக்கிறது. 150 மேற்பட்ட நாடுகளுக்கு, அவசரகால சுகாதார மற்றும் மருத்துவ வினியோகங்களும் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஐ.நா. தடுப்பூசி திட்டப்பணிக்கு இந்தியா 15 கோடி டாலர் வழங்க உறுதிமொழி அளித்திருக்கிறது. மேலும் அண்டை நாடுகளுக்கான கொரோனா அவசரகால நிதி திட்டத்தை உருவாக்கி, அதற்கு தனது தொடக்க பங்களிப்பாக ஒரு கோடி டாலர் அளித்துள்ளது.

கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்றாலும், பல நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கியிருப்பதால், இந்த ஆண்டு ஆக்கபூர்வமாகவே ஆரம்பித்திருக்கிறது.

இத்தொற்றில் இருந்து எல்லோருமே பாதுகாக்கப்பட்டால்தான் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு. உலகம் முழுவதும் அனைவருக்கும் சமமாக, கட்டுப்படியாகக்கூடிய விதமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வது நம் அனைவரின் பொறுப்பு. அதற்கு இந்தியாவும் துணைநிற்கும்.’

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News