செய்திகள்
பாத்திமா லத்தீப்

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை - 15 தோழிகளிடம் தகவல்கள் சேகரிப்பு

Published On 2019-11-14 06:54 GMT   |   Update On 2019-11-14 06:54 GMT
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது 15 தோழிகளிடம் போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.
சென்னை:

சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிக அளவில் தங்கி படித்து வருகிறார்கள்.

கேரள மாநிலம் கொல்லம் கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற 18 வயது மாணவியும் ஐ.ஐ.டி. வளாகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்தார். ஒன்றாக படிக்கும் பாத்திமா லத்தீப் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் சிறப்பான மாணவியாக தேர்வு பெற்று முதுகலை “மானிடவியல்” பாடத்தை எடுத்து படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு தனது விடுதி அறையிலேயே அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோட்டூர்புரம் உதவி கமி‌ஷனர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் அஜுகுமார் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மாணவி பாத்திமா லத்தீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மாணவி தற்கொலை விவகாரம் 5 நாட்களுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் விஸ்வரூபம் எடுத்தது.

மாணவியின் தற்கொலைக்கு ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனே காரணம் என்று வெளியான தகவலே இதற்கு காரணமாகும். மாணவியின் செல்போனை பரிசோதித்து பார்த்த போது, அதில் இது தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

குறிப்பிட்ட பாடத்தில் குறைவான மதிப்பெண்ணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் வழங்கி இருப்பதாக மாணவி பாத்திமாலத்தீப் கூறியுள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு கேரளாவுக்கு சென்ற அவரது பெற்றோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தனர். மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் அளித்த புகாரில், எனது மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் பெயரை எழுதி வைத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனுவை மையமாக வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து புகாருக்குள்ளான பேராசிரியர் சுதர்சன்பத்மநாபன் மற்றும் 4 பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தவிர பாத்திமா லத்தீப்பின் தோழிகள் 15 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் மாணவி பாத்திமா யார்-யாரிடம் செல்போனில் பேசியுள்ளார் என்பது பற்றிய தகவல்களையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத ரீதியான துன்புறுத்தலே மாணவி பாத்திமா லததீப் உயிரிழப்புக்கு காரணம் என்றும், பேராசிரியர் பத்மநாபனை கைது செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.



மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி பாத்திமா குறிப்பிட்டுள்ள 2 பேராசிரியர்களையும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஐ.ஐ.டி.யில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று கூறும் போது, மதிப்பெண் குறைவாக எடுத்ததாலேயே மாணவி தற்கொலை செய்து இருப்பதாகவும், இருப்பினும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News