செய்திகள்
விவசாய சங்க பொதுச்செயலாளர் சர்வான் சிங் பாந்தர்

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 3 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம்- பஞ்சாப் விவசாய சங்கம் அறிவிப்பு

Published On 2020-09-18 03:11 GMT   |   Update On 2020-09-18 03:11 GMT
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை ரெயில் மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது.
சண்டிகர்:

கடந்த14-ந் தேதி தொடங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. 

வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இந்த மசோதாக்களுக்கு ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் வேளாண் மசோதாக்களுக்க எதிர்ப்பு தெரிவித்து 3 நாட்கள் தொடர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கம் அறிவித்துள்ளது.  

செப்டம்பர் 24 முதல் 26 வரை ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக விவசாய சங்க பொதுச்செயலாளர் சர்வான் சிங் பாந்தர்  தெரிவித்தார். 

ஏற்கனவே பல்வேறு விவசாய அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) முறையை அகற்றுவதற்கு வழிவகுக்கும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். 
Tags:    

Similar News