செய்திகள்
துப்புரவு பணிக்கு பயன்படுத்தபட்ட நவீன எந்திரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

சிவகாசி நகராட்சி பகுதியில் துப்புரவு பணிக்கு புதிய எந்திரம் - அதிகாரிகள் முன்னிலையில் சோதனை

Published On 2021-09-25 14:22 GMT   |   Update On 2021-09-25 14:22 GMT
சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் துப்புரவு பணிகளை வேகப்படுத்தும் வகையில் புதிய எந்திரம் வாங்க அதிகாரிகள் முடிவு செய்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சிவகாசி:

33 வார்டுகளை கொண்ட சிவகாசி நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை அகற்ற 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தேவைப்பட்ட நிலையில் புதிய பணியாளர்கள் நியமனம் இல்லாததால் தற்போது உள்ள 113 தூய்மை பணியாளர்களுடன் தனியார் நிறுவன ஒப்பந்தத்துடன் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள நிலையில் நகராட்சியில் 82 துப்புரவு பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதனால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தெருக்களில் இருந்து குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி ஆனையூர், தேவர்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், பள்ளப்பட்டி, நாரணாபுரம், விஸ்வநத்தம், அனுப்பன்குளம், சித்துராஜபுரம் ஆகிய பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்க அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பஞ்சாயத்து பகுதிகளிலும், திருத்தங்கல் நகராட்சியிலும் போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாத நிலையில் மாநகராட்சியாக சிவகாசி தரம் உயர்த்தப்பட்ட பின்னர் குப்பைகளை அகற்றுவதில் பெரும் சிரமம் ஏற்படும்.

இந்தநிலையில் கோவையில் உள்ள ஒரு பிரபல நிறுவனம் தெருக்களை சுத்தம் செய்ய புதிய நவீன எந்திரத்தை கண்டுபிடித்து ப்லவேறு ஊர்களுக்கு அனுப்பி குப்பைகளை சேகரிக்கும் பணிகளை செய்து வருகிறது. இந்த எந்திரத்தை பயன் படுத்தி தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தது.

சிவகாசி சிவன் கோவிலில் இருந்து தொடங்கப்பட்ட துப்புரவு பணி திருத்தங்கல் ரோட்டில் முடிந்தது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தை இந்த நவீன எந்திரம் சில நிமிடங்களில் சுத்தம் செய்தது. எந்திரத்தின் பணிகளை பார்த்த சிவகாசி நகராட்சி அதிகாரிகள் முழு திருப்தி அடைந்தனர். எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிள், முக்கிய பிரமுகர்கள் கேட்டறினர்.

Tags:    

Similar News