செய்திகள்
புரோ கபடி லீக்

புரோ கபடி லீக்: எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை- அரியானா, உ.பி. யோதா- பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை

Published On 2019-10-12 10:02 GMT   |   Update On 2019-10-12 10:02 GMT
புரோ கபடி லீக்கில் எலிமினேட்டர் சுற்றில் மும்பை - அரியானா, உ.பி. யோதா - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. அதன்படி ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்களில் விளையாடின. மொத்தம் 132 ‘லீக்’ ஆட்டங்கள் நடைபெற்றன.

இதன் முடிவில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், உ.பி. யோதா, யு.மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூர் புல்ஸ் ஆகிய அணிகள் முதல் 6 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், குஜராத் பார்ச்சூன், புனேரி பல்தான், தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் முறையே 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின.

முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி, பெங்கால் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். மற்ற 4 அணிகளும் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடும்.

இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் அகமதாபாத்தில் தொடங்குகிறது. அன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ‘எலிமினேட்டர் 1’ ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த உ.பி.யோதாவும்- 6-வது இடத்தை பிடித்த பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இதில் வெற்றிபெறும் அணி அரை இறுதியில் டெல்லியை சந்திக்கும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ‘எலிமினேட்டர் 2’ ஆட்டத்தில் 4-வது இடத்தை பிடித்த மும்பையும்- 5-வது இடத்தை பிடித்த அரியானா அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் பெங்கால் வாரியர்சுடன் விளையாடும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

அரைஇறுதி ஆட்டங்கள் 16-ந் தேதியும், இறுதி போட்டி 19-ந் தேதியும் நடைபெறும்.
Tags:    

Similar News