செய்திகள்
மழை

சென்னையில் கூடுதலாக 14 செ.மீ மழை பெய்துள்ளது

Published On 2021-09-02 04:54 GMT   |   Update On 2021-09-02 06:36 GMT
திருவள்ளூரில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 1 வரை 3 மாத காலத்தில் சராசரி மழை அளவு 325.4 மி.மீ ஆகும். ஆனால் இந்த 3 மாதத்தில் 466.7 மி.மீ மழை பெய்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கியது. வழக்கமாக தென்மேற்கு பருவமழையின்போது மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகமாக மழைபெய்யும்.

ஆனால் இந்த ஆண்டு அந்த பகுதிகளில் ஜூன், ஜூலை மாதங்களில் மழைப்பொழிவு குறைவாகவே இருந்தது. ஆகஸ்டு மாதமும் அதிக மழை பெய்யவில்லை. அதேநேரத்தில் தென்மேற்கு பருவமழையின்போது இந்த ஆண்டு சென்னையில் அதிக மழை பெய்துள்ளது.

சென்னையில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரையிலான 3 மாதங்களில் 465.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 321.1 மி.மீ மழையே பெய்ய வேண்டும். இயல்பை விட கூடுதலாக 144.7 மி.மீ மழை பெய்துள்ளது.

அதாவது கூடுதலாக 14 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் 384.8 மி.மீ மழை பெய்துள்ளது. ஆனால் இயல்பான மழை அளவு 355.4 மி.மீ ஆகும். இயல்பைவிட கூடுதலாக 29.4 மி.மீ அதிக மழை பெய்தது.



ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் சென்னையின் சராசரி மழை அளவு 440 மி.மீ, சென்னை புறநகரில் சராசரி மழை அளவு 480 மி.மீ ஆகும். சென்னையில் சராசரி மழையையும் தாண்டி மழை பெய்துள்ளது.

வரும் நாட்களிலும் சென்னையில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 1,383.9 மி.மீ ஆகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையின்போது 867.4 மி.மீ மழை பெய்யும். தற்போது கூடுதலாக மழை பெய்துள்ளதால் சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது குறைவான மழை பெய்தால் கூட தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

திருவள்ளூரில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 1 வரை 3 மாத காலத்தில் சராசரி மழை அளவு 325.4 மி.மீ ஆகும். ஆனால் இந்த 3 மாதத்தில் 466.7 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 43 சதவீதம் கூடுதல் மழை ஆகும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த 3 மாதத்தில் 325.4 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 296.2 மி.மீ மழையே பெய்துள்ளது. 9 சதவீதம் மழை குறைந்துள்ளது.


Tags:    

Similar News