வழிபாடு
சுவாமி, அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.

மாசி மகா சிவராத்திரி திருவிழா: ராமேசுவரத்தில் இன்று தேரோட்டம்

Published On 2022-03-01 02:59 GMT   |   Update On 2022-03-01 02:59 GMT
மகா சிவராத்திரியான இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலும் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.
ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் 8-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக மேலத்தெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பின்னர் இரவு 8 மணிக்கு மண்டகப்படியில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தனர்.

விழாவின் 9-ம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை சுவாமி, அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8.40 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. மாசி மகாசிவராத்திரியான இன்று ராமேசுவரம் கோவிலானது பகல் மற்றும் இரவு முழுவதும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். மகா சிவராத்திரியான இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலும் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News